மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு
பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மதகுகளை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.
மணிமுத்தாறு அணை திறப்பு
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் வேகமாக நிரம்பி வருகிறது. 118 அடி உயரம் கொண்ட அந்த அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 115.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 697 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவிற்கு இணங்க பிசான சாகுபடிக்காக நேற்று மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு அணையில் தண்ணீர் திறப்பதற்கான மதகு சாவியை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அந்த சாவி மூலம் மணிமுத்தாறு அணையில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீரை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
சபாநாயகர் அப்பாவு பேட்டி
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
பிசான சாகுபடிக்காக அணையில் 1, 2-வது ரீச்களில் மட்டும் இன்று (நேற்று) முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 118 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் அம்பை, சேரன்மாதேவி, நாங்குநேரி மற்றும் பாளையங்கோட்டை தாலுகாவை சார்ந்த கிராமங்கள் பயன்பெறும்.
அணையில் இருந்து இந்த ஆண்டு 1, 2-வது ரீச்களில் தண்ணீர் வழங்க முன்னுரிமை இருந்தாலும், அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று 3, 4-வது ரீச்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு பருவமழை காலங்களில் நிரம்பாத குளங்கள் நிரப்பப்படும்.
வெள்ளநீர் கால்வாய்
மேலும் மழைக்காலத்தில் வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை 2009-ம் ஆண்டே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
2 இடங்களில் பாலங்கள் கட்டும் பணிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும். பின்னர் மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதகுகளை பார்வையிட்டார்
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் மணிமுத்தாறு அணையில் உபரிநீர் வெளியேறும் மதகுகள் வரை சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அணைக்கு நீர்வரத்து மற்றும் அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சத்யதாஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட், ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி, ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாம்
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம், ஊரக-நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 85 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் தேர்வான இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
முகாமில் பங்கேற்ற காரையாறு பகுதியைச் சேர்ந்த பழங்குடியின காணி இன மாணவிக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வழித்தடத்தில் பஸ் சேவை
கூடங்குளம் அருகே கூத்தங்குளியில் இருந்து அஞ்சுகிராமத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, கொடியசைத்து புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் சபாநாயகரும் அந்த பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்து சிறிது தூரம் பயணம் செய்தார்.
தொடர்ந்து கூத்தங்குளியில் புதிதாக அமைக்கப்பட்ட ரேஷன் கடை மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏ.டி.எம். மையம் ஆகியவற்றையும் சபாநாயகர் திறந்து வைத்தார். பின்னர் பழவூர்-நாகர்கோவில் இடையேயும், விஜயாபதி-நாகர்கோவில் இடையேயும் புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவையை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நாட்டுகிறார்
ரூ.2 கோடி மதிப்பீட்டில் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட பணகுடி மாதா கோவில் தெரு, கிருஷ்ணபுரம், சைதம்மாள்புரம், புஷ்பவனம், ஸ்ரீரெகுநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள மண் சாலைகளுக்கு பதில் தார்சாலைகள் அமைக்கவும், பணகுடி வருவாய் ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணிகளையும் சபாநாயகர் மு.அப்பாவு பணகுடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
Related Tags :
Next Story