அ.தி.மு.க. தலைமை தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை


அ.தி.மு.க. தலைமை தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை
x
தினத்தந்தி 5 Dec 2021 9:49 AM IST (Updated: 5 Dec 2021 9:49 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு நேற்று முன்தினம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார். விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமபொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்படவில்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 2-வது நாளாக நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து நேற்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

அவர்கள் இருவரும் தங்கள் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் ஆணையர்களான சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் சமர்ப்பித்தனர். கட்சி விதிகளின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 15 பேர் முன்மொழிய வேண்டும், 15 பேர் வழிமொழிய வேண்டும். அந்த வகையில் கட்சியின் முன்னனி நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் ஆகியோர் அவர்களின் பெயர்களை பரிந்துரை செய்தனர். 

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நாளை(டிசம்பர் 6) வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story