பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவே கட்டாய தடுப்பூசி திட்டம்
கொள்ளை நோய்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கட்டாய தடுப்பூசி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்
கொள்ளை நோய்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கட்டாய தடுப்பூசி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நிவாரண பொருட்கள்
வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களின் வீடுகளை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வில்லியனூர்-ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் வீடுகளை சீரமைக்கவும், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக இங்கு ஒரு நடமாடும் கழிப்பறையை உடனடியாக நிறுத்தும்படி சுகாதாரத்துறை மற்றும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுக்கு கூறியிருக்கிறேன்.
கட்டாய தடுப்பூசி திட்டம்
புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். இது பொது மக்களின் நலனுக்காக மட்டுமே. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி மட்டும் தான் கொரோனா வைரசில் இருந்து நமக்கு பாதுகாப்பு தருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை என்றால் இன்னும் அதிகரித்திருக்கும். உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்கான தனிப்பட்ட சட்ட விதிமுறைகள் இருக்கிறது. கொள்ளை நோய்க்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க கட்டாயப்படுத்தும் நிலை இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பிரசாரத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. யாரையும் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story