தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் கலைப்பா? அமைச்சர் கே.என்.நேரு பதில்


தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் கலைப்பா? அமைச்சர் கே.என்.நேரு பதில்
x
தினத்தந்தி 5 Dec 2021 8:20 PM GMT (Updated: 5 Dec 2021 8:20 PM GMT)

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

சேலம்,

சேலத்தில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, ‘கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் நிர்வாக பொறுப்புகளில் இருப்பதால் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து பேசினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

விரைவில் நல்ல முடிவு

நான் ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். தற்போது ஆட்சி மாறினாலும், கூட்டுறவு சங்கங்களை உடனடியாக கலைக்க முடியாது. அதற்கான சட்ட திருத்தங்களை ஆராய்ந்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்த சட்டம் வேறு, தற்போது உள்ள சட்டம் வேறு. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே, கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Next Story