வாத்திய குழுவினரை தாக்கி கொலை மிரட்டல்
பாகூர் அருகே வாத்தியக் குழுவினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர்
பாகூர் அருகே வாத்தியக் குழுவினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவ வாத்தியக்குழு
புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் அடுத்துள்ள கோர்க்காடு, புதுநகர், அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் அலுகிரிவன் (வயது 24) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், கோவில் திருவிழாக்களில் தனது குழுவினருடன் சிவ வாத்தியங்களையும் இசைத்து வருகிறார்.
அதன்படி, பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் கடந்த 4ந் தேதி இரவு சித்தர் பீட திருவிழாவிற்காக, அலுகிரிவன் தனது குழுவினருடன் சிவ வாத்தியம் வாசிக்க சென்றுள்ளார்.
தகராறு செய்த கும்பல்
தொடர்ந்து, அன்று இரவு நடந்த சாமி வீதியுலாவின் போது, சிவ வாத்தியம் வாசித்துள்ளனர். அப்போது, சோரியாங்குப்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஒரு கும்பல், வாத்தியக் குழுவினரிடம், நாங்கள் சொல்லும் பாட்டிற்கு வாத்தியம் அடிக்க வேண்டும். நாங்கள் குத்தாட்டம் போட வேண்டும் என கூறினர்.
அதற்கு, சிவ வாத்திய குழுவினர் ஓரமாக போய் ஆடுங்கள் என கூறி உள்ளனர். அப்போது, அவர்கள் ஆடும் போது, சிவ வாத்திய குழுவினர் மீது இடித்து இடையூறும் செய்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் அதிகாலை நிகழ்ச்சியை முடித்து விட்டு சிவ வாத்தியக் குழுவினர் மினி வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
வழிமறித்து தாக்குதல்
சோரியாங்குப்பம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வாகனத்தை வழிமறித்து, வாத்திய குழுவினர் மீது தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
இதில், காயமடைந்த அலுகிரிவன் (24) செல்வகுமார் (21) ஏழுமலை (42) மணிமாறன் (22) ஆகியோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அலுகிரிவன் கொடுத்த புகாரின் பேரில் சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த சுகன், முருகன், சங்கர் உள்பட 4 பேர் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்
Related Tags :
Next Story