கடன் தொல்லையால் மனஉளைச்சல்: மகனை கொன்று மனைவியுடன் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் மனஉளைச்சல்: மகனை கொன்று மனைவியுடன் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2021 1:51 AM IST (Updated: 7 Dec 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான தொழில் அதிபர் தனது மகனை கொன்று விட்டு மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தேடிக்கொண்ட இந்த துயர முடிவை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது தம்பிக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் மனோ நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 38). இவருடைய மனைவி கனகதுர்க்கா(வயது 33). இவர்களுடைய‌ ஒரே மகன் ஸ்ரீவத்சன்(11). இவன், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராஜா தொழில் நிமித்தமாக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

கடன் தொல்லையால் மனஉளைச்சல்

கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழிலில் ராஜாவுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராஜாவுக்கு கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்த ராஜா கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுபற்றி தனது மனைவியிடம் கூறி மிகுந்த வேதனை அடைந்து வந்துள்ளார்.

கடனை திருப்பி கொடுக்க வழி தெரியாத ராஜா ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைப்பதை விட ஒரேயடியாக குடும்பத்துடன் செத்து விடுவது என்று தற்கொலை செய்ய முடிவு செய்து தனது மனைவியிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.

மகனை கொன்று தற்கொலை

இதற்கு கனகதுர்க்காவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு ராஜா தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தனது ஒரே மகனை கழுத்தை நெரித்து கொன்று உள்ளார். பின்னர் ராஜாவும், அவரது மனைவி கனகதுர்க்காவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

‘வாட்ஸ்-அப்பில்’ தம்பிக்கு தகவல்

இந்த துயர முடிவை தேடிக்கொள்வதற்கு முன்பாக ராஜா இந்த தகவலை புதுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து அங்குள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் தனது தம்பி தினேஷ் என்பவருக்கு செல்போனில் வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பேசி அதனை ‘வாட்ஸ்-அப்’ மூலமாக அனுப்பி வைத்து உள்ளார்.

அதில் தனக்கு கடன் கொடுத்தவர்கள் தனக்கு அதிகம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இதனால் தான் மன அமைதியில்லாமல் இருப்பதாகவும், வேறு வழியில்லாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பேசி அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே தகவல் அறிந்து சென்ற போலீசார் வீட்டில் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story