தமிழகத்தில் முதல்முறையாக மறு சுழற்சி இல்லாத ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறை


தமிழகத்தில் முதல்முறையாக மறு சுழற்சி இல்லாத ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறை
x
தினத்தந்தி 6 Dec 2021 8:56 PM GMT (Updated: 6 Dec 2021 8:56 PM GMT)

தமிழகத்தில் முதல் முறையாக மறு சுழற்சி இல்லாத ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறையை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரகவியல் துறை சார்பில் மறு சுழற்சி அற்ற ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டயாலிசிஸ் சிகிச்சை எனப்படும் ரத்த மறுசுழற்சி அடிப்படையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சைக்காக ஒரு நபருக்கு ரத்த சுத்திகரிப்பு முறையானது குறைந்தது 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். அதிகபட்சமாக வாரம் ஒரு முறை மாற்றப்படும். இதற்காக உடலில் ஒரு கருவி பொருத்தப்படும். அந்த கருவியை மறுசுழற்சி மூலம் 6 முதல் 8 முறை சுத்தம் செய்து பயன்படுத்த முடியும். அவ்வாறு சுத்தம் செய்யும்போது நோயாளிக்கும், டாக்டர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

முதல்முறையாக...

இதனால், தமிழகத்தில் முதல் முறையாக ஒரே கருவி மூலம் டயாலிசிஸ் செய்யப்படும் கருவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தொற்று பரவாது. மேலும் இது பாதுகாப்பானது.

முதுநிலை 2-ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது கவலையளிக்கிறது. கலந்தாய்வு நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஜனவரி 6-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன்பிறகு அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்ற பிறகு மாநில கலந்தாய்வு நடைபெறும். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.

பணி நீக்கம்

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது என்பதையும் மருத்துவ மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் பாலியல் புகார் வந்துள்ள நிலையில் அவரை ஆஸ்பத்திரி டீன் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story