அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி ஏற்பு


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 3:52 AM IST (Updated: 7 Dec 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் 7-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் பெறப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் விருப்பம் தெரிவித்து வேட்புமனு அளித்திருந்தனர். அவர்களது பெயர்களில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் இந்த தேர்தலில் போட்டி இல்லை என்பது உறுதியானது.

போட்டியின்றி தேர்வு

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு உள்கட்சி தேர்தல் கமிஷனர்களான சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேற்று மாலை வந்தனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

இந்தநிலையில் தேர்தல் முடிவை பொன்னையன் வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கும் போட்டியிட வேண்டி ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அவர்களுடைய மனு அ.தி.மு.க. சட்ட திட்ட விதியின்படி சரியாக இருந்தது. எனவே ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.’ என்று கூறினார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து

இந்த அறிவிப்பை கேட்டதும் கட்சி அலுவலகத்துக்குள் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலத்த கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுக்கள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்தில் திளைத்தனர். மேள-தாளங்களும் இசைக்கப்பட்டன. மகளிரணி தொண்டர்கள் குத்தாட்டம் போட்டனர். இதன் காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

அ.தி.மு.க.வினர் ஆரவாரத்துக்கு இடையே ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் கமிஷனர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள தங்களது அறைக்கு சென்று சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

தலைவர்கள் சமாதியில் மரியாதை

அதன்பின்னர் இருவரும் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றனர். அங்கு ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து 2 பேரும் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிக்கும் சென்று மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பை மீண்டும் ஏற்றவுடன், ‘தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்’ என்று அறிவிப்பை முதல் அறிக்கையாக வெளியிட்டனர்.

Next Story