கொமந்தான்மேடு தடுப்பணை கரை உடைந்து வீணாகும் தண்ணீர்


கொமந்தான்மேடு தடுப்பணை கரை உடைந்து வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 7 Dec 2021 10:41 PM IST (Updated: 7 Dec 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கொமந்தான்மேடு தடுப்பணையின் கரைப்பகுதி உடைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து நிலவுகிறது

பாகூர்
கொமந்தான்மேடு தடுப்பணையின் கரைப்பகுதி உடைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.

தடுப்பணை

புதுச்சேரி கடலூர் மாவட்டத்திற்கு எல்லைப் பகுதியான பாகூர் அருகே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் ஒரு கரை கடலூர் மாவட்டம் பராமரிப்பிலும் மறுகரை புதுச்சேரி அரசு பராமரிப்பிலும் இருந்து வருகிறது. 
இந்தநிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் எண்ணத்தில் அரசு பொதுப்பணித்துறை சார்பில் கொமந்தான்மேடு கிராமப்பகுதியில் தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணை சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் சுமார் 2 லட்சம் மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்க முடியும். இதனால் கடலூர் மற்றும் புதுச்சேரி எல்லைப்பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்தது.

குடிநீர் தட்டுப்பாடு

தற்போது பெய்த பருவ மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பாகூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கொமந்தான்மேடு தடுப்பணை      உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாக கடலில் கலக்கிறது. முழுவதுமாக தண்ணீர் வெளியேறினால் இரு மாநிலத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.
தடுப்பணை உடைந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கரை சேதமடைந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கையால் கரையை பலப்படுத்த கருங்கல் ஜல்லி மற்றும் மணல் மூட்டைகளை கொட்டி பாதுகாத்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள கரை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

 சேதமடைந்த கரைப்பகுதி

ஆனால் புதுச்சேரி மாநில எல்லைகளில் உள்ள கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் கரையோரம் போடப்பட்ட சாலை சுமார் 100 மீட்டருக்கு உடைந்து கரையும் சேதமடைந்து விட்டது. ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தண்ணீரை சேமிக்க புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story