உதட்டில் மச்சம்... பூனையை காணவில்லை சுவரொட்டியால் பரபரப்பு
உதட்டில் மச்சத்தை அடையாளமாக கொண்ட பூனையை காணவில்லை என கோவையில் ஒட்டியிருந்த சுவரொட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கோவை,
பொதுமக்கள் இடையே செல்லப்பிராணிகளை வளர்ப்பது அதிகரித்து உள்ளது. குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகள் அதிகமாக வளர்க்கப் படுகிறது. இந்த செல்லப்பிராணிகளுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளை சேர்ந்த நாய் அல்லது பூனை என்றால் அவற்றின் விலையும் அதிகம், மேலும் அதன் பராமரிப்பு செலவும் அதிகமாக உள்ளது. இருப்பினும் பலர் அதனை வாங்கி ஆசையுடன் வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் பூனை படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அதில் எழுதப்பட்டு இருந்த வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த சுவரொட்டியில் 6 வயதான பூனையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் பூனையின் அடையாளமாக உதட்டில் மச்சம் இருக்கும் என்றும், பூனையின் பெயர் ஜெசி என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பூனையின் உரிமையாளர் கூறும்போது, ரஷ்யன் கேட் வகையை சேர்ந்த இந்த பூனை கடந்த 29-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானது. மிகவும் பாசமாக வளர்த்த பூனை என்பதால் அதை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதற்காக சுவரொட்டி ஒட்டி இருந்தோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story