ஜெர்மனியில் நடைபெற இருந்த ஜவுளி கண்காட்சி ரத்து-ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் இழப்பு
ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் நடைபெற இருந்த ஜவுளி கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கரூர்,
ஜவுளி கண்காட்சி
உலக பிரசித்தி பெற்ற ஜவுளி கண்காட்சி ஜெர்மனி நாட்டில் பிராங்பர்ட் நகரில் ஜனவரி மாதம் 11-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை எடுத்து வருவது வழக்கம்.
இந்த கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு புதிய உத்திகள் மற்றும் தொழில் நுட்பத்தின்படி அதிக ஆர்டர்களை பெறுவது குறித்தும், புதிய டிசைன்கள் குறித்து கரூர் நகரில் விரிவான கருத்தரங்கம் நடைபெற்றது.
புதிய டிசைன்கள்
இதையடுத்து, புதிய மாதிரிகளை தயாரித்து கண்காட்சியில் வைத்து அதன் மூலம் ஆர்டர்களை பெற வேண்டும் என்ற வகையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. பல ஏற்றுமதியாளர்கள் அதற்கான டிசைன்களை தயார் செய்து முன்னதாக கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் கண்காட்சியில் அரங்குகள் அமைக்க தேவையான இடங்களை வாடகைக்கு பிடிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோல் அரங்கில் இருந்து பணியாற்றவும், பிற நாட்டினர் அமைத்திருக்கும் அரங்குகளை பார்வையிடவும், புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும் ஊழியர்கள் தயார் செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் அங்கு செல்வதற்கான விமான டிக்கெட், ஜெர்மனி நாட்டில் தங்குவது உள்ளிட்டவைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வந்தனர்.
ஒமைக்ரான் வைரஸ்
பிராங்பர்ட் நகரில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் இந்தியா சார்பில் 350-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட இருந்தது. இதில் ஹரியானா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக கரூர் மாவட்டத்தின் சார்பில் 45 அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கண்காட்சி ரத்து
இதற்கிடையே ஜவுளி கண்காட்சி பிராங்பர்ட் நகரில் நடத்துவதால் நோய் பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவும், நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் ஜெர்மனி அரசு இந்த கண்காட்சியை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
இதனால் இந்த கண்காட்சியை நம்பியிருந்த கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
7 லட்சம் தொழிலாளர்கள்
இதுகுறித்து கரூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 7 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றன.
ஆண்டுதோறும் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் உலக ஜவுளி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை பெற்று வருவார்கள். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைப்பதுடன், அன்னிய செலவாணியும் அதிகரிக்கும்.
வர்த்தகம் பாதிப்பு
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் ஜவுளி கண்காட்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் கண்காட்சியை ரத்து செய்து உள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கண்காட்சியில் அரங்குகள் அமைத்து அதில் கலந்து கொள்வதற்கான அனைத்து முன் ஏற்பாடு பணிகளும் செய்து விட்ட நிலையில் தற்போது கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினர்.
ஏற்றுமதியாளர்கள் கவலை
ஏற்கனவே நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளித்துறை நலிவடைந்து உள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் நடைபெற இருந்த ஜவுளி கண்காட்சி ரத்து செய்யப்பட்டதால் இந்த தொழிலை நம்பியுள்ள 7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story