மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம்: தி.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொலை செய்த மகள்


மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம்: தி.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொலை செய்த மகள்
x
தினத்தந்தி 9 Dec 2021 2:49 AM IST (Updated: 9 Dec 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் தினமும் தகராறு செய்த தி.மு.க. பிரமுகரை கூலிப்படையை ஏவி அவரது மகள் கொலை செய்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் செம்பொன்விளையை சேர்ந்தவர் குமார் சங்கர் (வயது 52), வயரிங் மற்றும் பிளம்பர் வேலைக்கு சென்று வந்தார். ரீத்தாபுரம் பேரூராட்சி 15-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு ரெத்னாவதி (46) என்ற மனைவியும், தீபாவதி (26), சோனியாவதி (23) என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் தீபாவதி கல்லூரியில் எம்.எட். படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி இரவு குமார் சங்கரின் வீட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வீட்டில் இருந்து சற்று தொலைவில் வெளியில் அழைத்துச் சென்று திடீரென சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார். இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

திட்டம் தீட்டிய மகள்

அப்போது திடீர் திருப்பமாக குமார் சங்கர் கொலையில் அவருடைய மகள் தீபாவதி மற்றும் மூவர்புரத்தை சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

திக்கணங்கோட்டில் உள்ள தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் படிக்க சென்றபோது தீபாவதிக்கும், நர்சிங் மாணவர் ஒருவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் தீபாவதி, தன் தந்தை தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தங்களை அடித்து கொடுமைபடுத்துகிறார் என்று அவரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது அவருக்கு, மாணவர் ஆறுதல் கூறியுள்ளார். இந்த நிலையில் தன் தந்தையை தீர்த்து கட்ட தீபாவதி முடிவு செய்து, தனது எண்ணத்தை மாணவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது கீழதிக்கணங்கோடு இல்ல விளாகத்தை சேர்ந்த ஸ்ரீமுகுந்தன் (21) என்பவரை அழைத்து அவர் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றலாம் என்று மாணவர் கூறியுள்ளார்.

3 பேர் கைது

அதன்படி மாணவர், ஸ்ரீமுகுந்தனை சந்தித்து, தனது தோழியின் தந்தையை கொலை செய்ய கூலியாக ரூ.60 ஆயிரம் பேசியுள்ளார். மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரத்தையும் ஸ்ரீமுகுந்தனிடம் கொடுத்துள்ளனர்.

இவர்களின் திட்டப்படி குமார் சங்கரை வீட்டில் இருந்து ஸ்ரீமுகுந்தன் அழைத்து சென்று தீர்த்து கட்டிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தீபாவதி, மாணவர் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் உவரியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீமுகுந்தனையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Next Story