10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் அமைச்சர் உறுதி


10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 8 Dec 2021 9:58 PM GMT (Updated: 8 Dec 2021 9:58 PM GMT)

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை துணிந்து 14417, 1098 என்ற எண்ணுக்கோ, ஆசிரியர்களிடமோ மறைக்காமல் தெரிவிக்க சொல்லி இருக்கிறோம். கரூரில் ஒரு ஆசிரியர் மீது தவறான குற்றச்சாட்டு வைத்துவிட்டார்கள் என்று சொல்லி அவராகவே தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டிருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாரை யாரும் தவறாக பயன்படுத்திவிடக்கூடாது. அதில் கண்ணும் கருத்தாக இருக்கிறோம். புகாரில் உண்மைத்தன்மை இருக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம்.

மத்திய அரசு மூலம் 412 வட்டங்களில் தலா 2 டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள். அவர்களை வைத்து உளவியல் ரீதியாக எப்படி ஆலோசனை வழங்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கான பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது.

கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் மற்றும் அப்போதைய சூழல் குறித்து முடிவுசெய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும், எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story