தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 9 Dec 2021 12:53 AM GMT (Updated: 2021-12-09T06:23:19+05:30)

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 12-ந்தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story