ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் திடீர் எதிர்ப்பு
பாகூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பாகூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆழ்துளை கிணறு
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் கடல்நீர் உட் புகுவதால் குடிநீரின் தரம் குறைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில், ரூர்பன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக ரூ.74 லட்சம் செலவில் பாகூர், கன்னியகோவில், காட்டுக்குப்பம் உள்ளிட்ட 9 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய்கள் மூலமாக கடற்கரை கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பணிகள் நிறுத்தம்
அதன்படி பாகூர்பேட் பின்னாச்சிகுப்பம் சாலையில் நேற்றுமுன்தினம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பாகூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டால் உள்ளூரில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் 3-வது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story