சாலை பணியை செய்ய விடாமல் தடுத்து மோதல்
ஆரோவில் சர்வதேச நகரில் சாலை பணியை செய்ய விடாமல் தடுத்து இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ஆரோவில் சர்வதேச நகரில் சாலை பணியை செய்ய விடாமல் தடுத்து இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச நகரம்
புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. தமிழக பகுதியான இது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவுக்கு உட்பட்டது ஆகும்.
கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நகரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது 50 ஆயிரம் பேர் வசிக்க கூடிய வகையில் திட்டமிட்டு கட்டுமானப்பணிகள் நடந்தன. தற்போது சுமார் 3,500 பேர் வரை மட்டுமே வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா உள்பட 52 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இங்கு அன்னையின் கனவு திட்டத்தின் கீழ் கிரவுன் சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
நடுரோட்டில் பிரார்த்தனை
இதையொட்டி அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு ஆரோவில் வாசிகளின் ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரோவில்லில் அமைதி கூட்டம் நடைபெற்றது. அப்போது வளர்ச்சிப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலைகள் விரிவாக்க பணி தொடங்கியது.
இதை அறிந்து ஆரோவில் வாசிகளின் ஒருதரப்பினர் திடீரென்று பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். பொக்லைன் எந்திரங்களை மறித்து நடுரோட்டில் அமர்ந்து திடீரென பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு
இதுபற்றி தகவல் அறிந்து இன்னொரு தரப்பினர் சாலை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து மோதிக்கொண்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆரோவில் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆரோவில் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story