சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை ஆஷா பணியாளர்கள் முற்றுகை


சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை  ஆஷா பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Dec 2021 11:20 AM IST (Updated: 10 Dec 2021 11:20 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை கண்டித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை ஆஷா பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

போலீசாரை கண்டித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை ஆஷா பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஆஷா பணியாளர்
புதுச்சேரியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆஷா பணியாளர்களும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தடுப்பூசி போடும்படி    வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆஷா பணியாளர் அமுதா அந்த பகுதியில் வீடு, வீடாக சென்று    பொதுமக்களை சந்தித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கூறினார். அப்போது ஒரு வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறி அமுதாவை தகாத வார்த்தைகளால்       பேசியதாக தெரிகிறது. பின்னர் அமுதா அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று விட்டார்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் அந்த குடும்பத்தினர், ஆஷா பணியாளர் அமுதா தங்களை அவதூறாக பேசியதாக கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக போலீசார், அமுதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். அவர் தனது கணவருடன் அங்கு சென்றார். போலீசார் அவர்கள் இருவரையும்  ஒரு மணி நேரம் அமர வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து ‘வாட்ஸ் அப்’பில் பதிவிட்டார்.
போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, ஆஷா பணியாளர்கள் நேற்று காலை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அமுதாவை போலீஸ் நிலையத்தில் அமர வைத்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டம் நடத்திய அவர்கள், இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story