குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உதவிய மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உதவிய மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
x
தினத்தந்தி 10 Dec 2021 12:19 PM IST (Updated: 10 Dec 2021 12:19 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயணைப்பு, மீட்பு பணியில் உதவிய மக்களுக்கு கம்பளி வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார்.

சென்னை,

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் வந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. அப்போது நஞ்சப்பசத்திரம் மக்கள், தீயணைப்பு மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு நஞ்சப்பசத்திரத்தில் மக்களை சந்தித்து, அவர்களின் சேவையை பாராட்டினார். மேலும், அவர்களுக்கு கம்பளி வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட போது இப்பகுதி மக்கள் உரிய நேரத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  மேலும், தங்கள் வீடுகளிலிருந்து போர்வைகள் மற்றும் பொருட்களை கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களது சேவை பாராட்டதக்கது. இதனால், அவர்களுக்கு குன்னூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறை சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருகிறார் என்பதால், மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அவரது வான் வழி பயணம் என்றாலும், சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர கண்காணிப்புப்பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

விபத்து தொடர்பாக கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இது வரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என்றார்.

Next Story