ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், தீபா-தீபக் வசம் ஒப்படைப்பு


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், தீபா-தீபக் வசம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 4:36 AM IST (Updated: 11 Dec 2021 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தின் சாவியை அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக்கிடம் சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி நேற்று வழங்கினார். அந்த வீட்டில் தான் குடியேற போவதாக ஜெ.தீபா தெரிவித்தார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அப்போதைய அ.தி.மு.க. அரசு முடிவு செய்தது.

அதன்படி, அந்த அரசு அதற்கான ஒரு தனிச்சட்டத்தையும் இயற்றியதோடு, வேதா நிலையத்தையும், அங்கு இருக்கும் சொத்துகளையும் அரசுடைமையாக்குவதற்கு அரசாணைகளையும் வெளியிட்டது.

வழக்கு

இந்த சட்டத்தையும், அரசின் இந்த முடிவையும் எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் வேதா நிலையத்துக்கு ரூ.67 கோடியே 90 லட்சத்தை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அவர்கள் இருவர் தரப்பிலும் தனிநபர் சொத்துகளை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், நினைவு இல்லமாக மாற்ற தடைவிதிக்கவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சேஷசாயி, கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், ‘‘ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தியும், இழப்பீடு நிர்ணயித்தும், அரசுடமையாக்கியும் தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்கிறேன்.

இந்த உத்தரவு கிடைத்த நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் வேதா நிலையத்தின் சாவியை மனுதாரர்களிடம், சென்னை கலெக்டர் ஒப்படைக்கவேண்டும்'’ என்று தெரிவித்து இருந்தார்.

சாவி ஒப்படைப்பு

அந்த உத்தரவுப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரின் வசம் வந்து இருக்கிறது.

இந்தநிலையில் ஐகோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, வேதா நிலையத்தின் சாவி, தீபா மற்றும் தீபக்கிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி, தீபா மற்றும் தீபக்கை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் வேதா நிலையத்தின் சாவியை கையெழுத்து பெற்று வழங்கினார். சாவியை வழங்கியதற்கான சாட்சியாக தீபா, தீபக்கின் சித்தியிடம் கையெழுத்து பெறப்பட்டது. அப்போது தீபாவின் கணவர் மாதவன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.

வீட்டில் குடியேற போகிறேன்

கலெக்டரிடம் சாவியை பெற்று வெளியே வந்த தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

சாவியை பெற்றது மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. இதை எந்த வார்த்தைகளாலும் சொல்ல இயலாது. எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் அத்தையின் (ஜெயலலிதா) ஆன்மா சாந்தி அடைய வேண்டும். அந்த வீட்டுக்குள் நான் வரக்கூடாது என்று சொன்ன போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.

இது என் அத்தையின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். தற்சமயம் அந்த இல்லத்தில் நாங்கள் குடியிருக்க திட்டமிட்டு இருக்கிறோம். இன்னும் நிறைய சட்ட விஷயங்கள் இருக்கிறது. அதையும் பார்க்க வேண்டும். முதலில் வீட்டை பராமரிக்க வேண்டும். எப்போது குடியேற போகிறேன் என்பதை பின்னொரு நல்ல நாளை பார்த்து சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நினைவில்ல பலகை அகற்றம்

அதையடுத்து அவர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு விரைந்து சென்றார். அவரைத் தொடர்ந்து தீபக்கும் வந்தார். தீபாவும், அவருடைய கணவரும் முதலில் கதவை திறந்து உள்ளே சென்று, வீட்டின் நுழைவுவாயிலில் இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது அங்கு வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான அறிவிப்பு பலகை சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது. அதை தீபா ஆதரவாளர்கள் கழற்றி தரையில் தலைகீழாக வைத்தனர்.

செல்போன் வெளிச்சத்தில் பார்த்தார்

கோர்ட்டில் வழக்கு இருந்ததால் வேதா நிலையம் பராமரிக்கப்படாமலேயே இருந்தது. வீட்டின் முக்கிய அறைகள் அனைத்தும் சீலிடப்பட்டு, தாசில்தார் வசம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீட்டின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளடைந்து காணப்பட்டதோடு, வீடு முழுவதும் தூசியாக பாழடைந்த நிலையில் இருந்ததாகவும், முதலில் வீட்டிற்குள் சென்ற தீபா செல்போன் வெளிச்சத்திலேயே வீட்டின் முக்கிய அறைகள் தவிர ஹால், பால்கனி உள்பட சில பகுதிகளை சென்று பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் தீபக்கும் சென்று பார்த்தார்.

முதல் தளத்தில் இருந்து கையசைத்த தீபா

அதனைத் தொடர்ந்து தாசில்தார், வருவாய் கோட்ட அதிகாரி ஆகியோர் அங்கு வந்து, ஏற்கனவே சீலிடப்பட்டு இருந்த அறைகளை திறந்துவிட்டனர். அந்த நேரத்தில் வீட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் மின்சார இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது.

வெகுநாட்களாக மூடப்பட்டு இருந்த சீலிடப்பட்ட அறைகளின் கதவுகளை திறக்க சற்று சிரமப்பட்டுள்ளனர். மூடப்பட்டு இருந்த ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று அங்கிருந்தவற்றை தீபாவும், தீபக்கும் பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் தொண்டர்களை வீட்டின் முதல்தளத்தில் இருந்தபடி பார்த்து உற்சாகமாக கையசைப்பது போல, ஜெ.தீபாவும், அவருடைய கணவரும் நேற்று வீட்டின் முதல்தளம் மற்றும் பால்கனியில் இருந்தபடி கையசைத்தனர்.

Next Story