ஹெலிகாப்டர் விபத்து; மீட்பு பணியில் உதவிய காட்டேரி கிராம மக்களுக்கு நன்றி - இந்திய விமானப்படை
ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணியில் உதவிய தமிழக முதல்-அமைச்சர், நீலகிரி கலெக்டர், போலீசார் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்ப சத்திரம் அருகே கடந்த 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரை இயக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு உள்ள அவருக்கு, அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலைப்பகுதியில் நடந்த இந்த ஹெலிகாப்டர் விபத்தால் மீட்புக்குழுவினர் வருவதற்கு கால தாமதம் ஆனது. ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களில் காட்டேரி பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கேப்டன் வருண் சிங்கை மீட்டனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். போலீசார், தீயணைப்புத்துறையினர், உள்ளூர் பொதுமக்கள், ராணுவம் உள்பட அனைத்து தரப்பும் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. தமிழக அரசு தரப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரபின் பெயரில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. மேலும், கோவையில் இருந்து சிறப்பு மருத்துவக்குழுவும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கும், மீட்பு பணியின் போது உதவிய அதிகாரிகளுக்கும் இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எதிர்பாராத விதமாக நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக உதவிகள் வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நீலகிரி கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story