பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க குழு
புதுச்சேரியில் பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரியில் பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாரதியார் பிறந்த நாள் விழா
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவப்படத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, சாய் சரவணன், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வானுயர சிலை
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாளை புதுச்சேரி அரசு கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரதியாரின் புகழைப்பாடும் அளவிற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. கவர்னர் மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. புதுச்சேரியில் 10 ஆண்டுகள் பாரதியார் வாழ்ந்தார். அப்போது ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக புதுச்சேரியை உருவாக்க கனவு கண்டார். அத்தகைய புதுச்சேரியை உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம்.
புதுச்சேரியில் பாரதியாருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இது தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து அதற்கான குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இயற்கை அழியாமல் பாதுகாக்கப்படும்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாரதியாருக்கு சிலை அமைக்க உதவுவதாக கூறியுள்ளனர். ஆகவே, பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆரோவில் நிர்வாகத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக தமிழக கவர்னரும், உறுப்பினராக நானும், மேலும் 2 ஆளுமைகளும் உறுப்பினர்களாக இருக்கிறோம். அன்னை கனவு கண்ட நகரம் 50 ஆண்டு காலமாக உருவாகவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.
இயற்கையை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை. அன்னை கனவு கண்ட நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழமையான மரங்கள் வேறிடத்தில் நடப்படுகின்றன. இயற்கை எந்த விதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கவர்னர் மாளிகை அருகே உள்ள பாரதியார் சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க.
பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் லதா, மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன், மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story