சென்னை மாநகர பஸ்சில் ஏறவந்த நரிக்குறவர் தம்பதிக்கு வரவேற்பு


சென்னை மாநகர பஸ்சில் ஏறவந்த நரிக்குறவர் தம்பதிக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 12:39 AM IST (Updated: 12 Dec 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மாநகர பஸ்சில் ஏற வந்த நரிக்குறவர் தம்பதிக்கு பாலை ஊற்றி பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும் டிரைவர்-கண்டக்டர் வரவேற்றனர்.

நரிக்குறவர் குடும்பத்தினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பஸ்சில் ஏறிய நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை நடுவழியில் நிறுத்தி, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் கீழே இறக்கிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு, பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் கிளை மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து துறை அலுவலகத்தில் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய விளக்கம் கொடுத்தார். அதில் அந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் பஸ்சில் சண்டைபோட்டதால் கீழே இறக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் மற்றும் கிளை மேலாளர் மீது எடுக்கப்பட்ட பணியிடைநீக்க நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது.

பாதபூஜை செய்து வரவேற்பு

இந்தநிலையில் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நேற்று நடந்தது. அதாவது, சென்னை பாரிமுனை-பெரம்பூர் நோக்கி செல்ல இருந்த மாநகர பஸ்சில் ஏறி பயணிக்க வந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு தம்பதியை, அந்த பஸ்சின் டிரைவர் அப்துல்மன்னா மற்றும் கண்டக்டர் பூமணி ஆகியோர் படிக்கட்டு அருகே நிறுத்தி, பால் மூலம் அவர்களுக்கு பாதபூஜை செய்ததோடு, அவர்களின் காலில் மஞ்சள், குங்குமம் வைத்தனர்.

அத்துடன் அந்த தம்பதிக்கு மாலை அணிவித்து, பஸ்சில் ஏறச்சொல்லி அவர்களை இன்முகத்தோடு வரவேற்றனர். இதுகுறித்து அந்த பஸ் டிரைவர்-கண்டக்டர் கூறும்போது, “அனைத்து பயணிகளையும் சமமாக நடத்தவேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று செய்ததாக” கூறினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


Next Story