காதலியை பார்க்க வந்த அதிரடிப்படை போலீஸ்காரரை தாக்கி கட்டாய தாலிகட்ட வைத்ததால் பரபரப்பு
பள்ளிகொண்டா அருகே காதலியை பார்க்க வந்த அதிரடிப்படை போலீஸ்காரரை தாக்கி கட்டாய தாலி கட்டவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த அத்தியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் விஜி (வயது 26). தமிழ்நாடு சிறப்பு காவல்துறை அதிரடி படைப்பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்து ஓ.ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் மகள் சாந்தரூபி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதற்கிடையில் விஜியும், பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்த எம்.சி.ஏ. படித்து முடித்த பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் விஜிக்கு திருமணம் ஆனதை தெரியாத அந்த பெண், நேற்று முன்தினம் இரவு கந்தனேரி வீட்டில் தன்னை சந்திக்கும்படி விஜியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் விஜி, அந்த பெண் வீட்டுக்கு இரவு 11 மணி அளவில் சென்றுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது அண்ணன்-தம்பி இருவரும் விஜியை சரமாரியாக தாக்கி தங்கையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தொலைத்து விடுவேன் எனக்கூறி கட்டாய தாலிகட்ட வைத்துள்ளனர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த விஜி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து விஜி பள்ளிகொண்டா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அண்ணன்-தம்பி இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரரை தாக்கி கட்டாய தாலி கட்டவைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story