இன்ஸ்டாகிராம் மூலமாக பெண் குரலில் பேச்சு.... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. எலக்ட்ரீசியன் கைது


இன்ஸ்டாகிராம் மூலமாக பெண் குரலில் பேச்சு.... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. எலக்ட்ரீசியன் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 5:49 PM IST (Updated: 12 Dec 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் மூலமாக பெண் குரலில் பேசி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் கலந்துரையாடி வந்தார். அப்போது இளம்பெண் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்த ஒரு நபர், அந்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இதுபோல் பல படங்களை மார்பிங் செய்து வைத்துள்ளதாகவும், நிர்வாணமாக வீடியோ அழைப்பில் வந்தால் அந்த படங்களை அழிப்பதாகவும், இல்லையென்றால் இணையதளத்தில் மார்பிங் படங்களை வெளியிடுவேன் என்றும் பெண் குரலில் பேசி மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.

சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் தனிப்படையினர் துப்பு துலக்கினர். இதில் கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ் (வயது 23) என்பவரை பிடித்தனர். இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நியாசிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “போலியாக இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்களை நியாஸ் உருவாக்கி உள்ளார். கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கல்லூரி மாணியின் படத்தை எடுத்து வைத்து மார்பிங் செய்து அனுப்பியுள்ளார்.

மேலும் சில நிர்வாண பெண்களின் படத்தை அனுப்பி இதுபோல் மாணவியின் படத்தையும் மார்பிங் செய்து வெளியிடுவேன் என்றும், அவ்வாறு செய்யாமல் இருக்க வீடியோ அழைப்பில் நிர்வாணமாக வர வேண்டும் என்றும் தொந்தரவு செய்துள்ளார்” என்றனர்.

நியாசிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் பல்வேறு இளம்பெண்களின் அரை நிர்வாண, முழு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நியாசை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story