ரெயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? - சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி


ரெயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? - சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி
x
தினத்தந்தி 12 Dec 2021 10:56 PM IST (Updated: 12 Dec 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஐ.ஆர்.சி.டி.சி இணையதள பக்கத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை,

ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள பக்கத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"ஐ.ஆர்.சி.டி.சி ரெயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும்.

திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐ.ஆர்.சி.டி.சி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் 14,135 பேர்தான்.

தமிழ் 8 கோடி பேரின் தாய் மொழி. ஒன்றிய அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14,000 பேரின் தாய் மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும். ஆனால் இவ்வளவு தொழில் நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய் மொழியை முன் பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story