மதுபோதையில் தகராறு: வாலிபர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை
லாலாபேட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது அக்காள் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
லாலாபேட்டை,
மதுபோதையில் தகராறு
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கம்ம நல்லூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 55), விவசாயி. இவருடைய மகன் விஜய் (25), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று மதியம் விஜய் தனது அக்காள் சூரியா (32) கணவரான அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சிவசூரியனுடன் (35) மது அருந்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் எதற்காக எனது அக்காவிடம் சண்டைபோடுகிறாய் என விஜய் தட்டி கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பீர் பாட்டிலால் குத்திக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சிவசூரியன் பீர் பாட்டிலை உடைத்து விஜயின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். பின்னர் சிவசூரியன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜயை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவசூரியனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story