திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 20 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் இன்று தொடங்குகிறது


திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 20 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 13 Dec 2021 7:51 AM IST (Updated: 13 Dec 2021 7:51 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நெல்லை, விருதுநகர் மேற்கு, நாகை, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு, செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள, ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

இதற்கு மட்டும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், கழக அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் (கட்சி உறுப்பினர்கள்), மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களிடமிருந்து பெற்று, அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்க வேண்டும். 

கட்சியின் சட்டத்திட்ட விதிமுறைகளின்படி, கட்சியின் அமைப்பு தேர்தல்களை முறையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்சியின் அமைப்பு தேர்தல்கள் சுமுகமாக நடைபெறும் வகையில், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story