அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Dec 2021 11:07 PM GMT (Updated: 14 Dec 2021 11:07 PM GMT)

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க தடை விதிக்க கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 2-ந்தேதி வெளியிட்டது. அதில், தேர்தல் வாக்குப்பதிவு 6-ந்தேதி நடைபெறும் என்று கூறியிருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓசூரை சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினர் ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க., விதிகளின்படி தேர்தல் அறிவிப்பு 21 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டும். ஆனால், 4 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேட்புமனுவுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வாக்காளர் பட்டியலும் வெளியிடவில்லை. சுமார் 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சிக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த இயலாது.

நாடகம்

மொத்தத்தில் இந்த தேர்தல் அறிவிப்பு என்பதே கபடநாடகமாகும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்தல் நடத்தாமலேயே தேர்வு செய்யவே, இதுபோல செயல்படுகின்றனர். எனவே, இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற நிர்வாகிகள் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து முடிவு செய்ய இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து, கடந்த வாரம் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

உகந்தது அல்ல

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்துள்ளனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 324-ன் கீழ் செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம், பொது தேர்தலை நடத்துவதுதானே தவிர, உள்கட்சி தேர்தலில் தலையிடுவது இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29 ஏ-வின்படி அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுகிறது, கட்சியின் பெயர் மாற்றம், தலைமை அலுவலகம் இடம் மாற்றம், நிர்வாகிகள் மாற்றும் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

தள்ளுபடி

ஆனால், இந்த சட்டப்பிரிவின் கீழ் உள்கட்சி தேர்தலை கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது என்று எதுவும் இல்லை. எனவே, இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை இணைத்துள்ளதை ஏற்க முடியாது. அரசுக்கு எதிராகத்தான் ரிட் வழக்கு தொடர முடியுமே தவிர, தனி நபர்களான அ.தி.மு.க. மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக ரிட் வழக்குகளை தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story