2 மனைவிகளை விட்டுவிட்டு 3-வது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; திருச்சி போலீஸ்காரர் பணி நீக்கம்
2 மனைவிகளை விட்டுவிட்டு, 3-வது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சிறுகனூர் போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் முத்துராஜாபாளையத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 33). கடந்த 2011-ம் ஆண்டு பட்டாலியன் காவலர் பிரிவில் பணியில் சேர்ந்த இவர், தொடர்ந்து ஆயுதப்படையில் பணியாற்றினார். கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி, குழந்தைகளுடன் நவீனின் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல், மற்றொரு பெண்ணை காதலித்து அவரை நவீன் 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர், முசிறி காவலர் குடியிருப்பில் அவரை தங்க வைத்து நவீன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் சிறுகனூர் போலீஸ் நிலையத்துக்கு 2-ம் நிலை போலீஸ்காரராக நவீன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அங்கு 3-வதாக ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இதன்காரணமாக அவர் 2-வது மனைவியின் வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், நவீன் பற்றி விசாரித போது, அவர் 3-வதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நவீனின் 2-வது மனைவி, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் இதுபற்றி புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் விசாரணை நடத்தியதில், நவீன் 2 திருமணம் செய்து இருப்பதும், 3-வதாக ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக பணி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story