தோகைமலை அருகே ஜவுளி தொழிற்சாலையில் தீவிபத்து
தோகைமலை அருகே ஜவுளி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.
தோகைமலை,
ஜவுளி தொழிற்சாலை
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பண்ணப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 42). இவர் அப்பகுதியில் ராஜலிங்கம் என்ற பெயரில் ஜவுளி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இதில் பண்ணப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு 40-க்கும் மேற்பட்ட தையல் எந்திரங்களை வைத்து கரூரிலிருந்து துணிகளை எடுத்து வந்து தைத்து அனுப்புவது வழக்கம்.
திடீர் தீ விபத்து
இந்த தொழிற்சாலையில் சமையலர்கள் பயன்படுத்தும் ஏப்ரன், திரைச்சீலைகள், தலையணை உறைகள், முகக்கவசங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உற்பத்தி செய்யப்படும் துணிகளை வாரந்தோறும் சனிக்கிழமை எடுத்து செல்வது வழக்கம்.
கடந்த 3 நாட்களாக தயாரான துணிகள் பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து புகை வெளியேறியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்
ஜவுளி தொழிற்சாலை கொளுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்ததால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, முசிறி, கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த தையல் எந்திரங்கள், ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள், துணிகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story