முன்னாள் அமைச்சர் தங்கமணி நண்பரின் சகோதரியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


முன்னாள் அமைச்சர் தங்கமணி நண்பரின் சகோதரியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 16 Dec 2021 12:19 AM IST (Updated: 16 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பரின் சகோதரியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும், சிங்கப்பூரில் அவர் சொத்துக்களை வாங்கி குவித்தாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

நொய்யல், 
நெருங்கிய தோழிகள்
கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே கூலக்கவுண்டனூரில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது மனைவி வசந்தி. இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் திலகவதி, மகன் மணிகண்டன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகளும், வசந்தியின் மகள் திலகவதியும் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், அவர்கள் நெருங்கிய தோழிகள் என்றும் கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாா்
இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதேபோல் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
அதன்படி வசந்தியின் வீட்டில் சோதனை நடத்துவதற்காக நேற்று அதிகாலை 5 மணியளவில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் வந்தனர்.
அதிரடி சோதனை
அப்போது வசந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால் புகளூர் மண்டல துணை தாசில்தார் அன்பழகன், லஞ்ச ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் வருவாய் துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்குள் சென்றதும் வீட்டின் உள் கதவை தாழிட்டுக்கொண்டனர். 
வசந்தியின் செல்போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தனர். அதேபோல் வெளியாட்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்த வசந்தியையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. 
சிங்கப்பூரில் சொத்துக்களை வாங்கி குவித்தாரா?
முன்னாள் அமைச்சரான தங்கமணியின் நெருங்கிய நண்பரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி இருந்து உள்ளார். இவர் தற்போது  சிங்கப்பூரில் தங்கி பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இதன் காரணமாக வேலுச்சாமியின் அக்காள் வசந்தியின் வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 
வேலுச்சாமி சிங்கப்பூரில் இருந்து கொண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சிங்கப்பூரில் சொத்துக்களை வாங்கி குவித்தாரா? என்பது குறித்தும், இதற்கான ஆவணங்கள் வேலுச்சாமியின் அக்காள் வசந்தியின் வீட்டில் மறைத்து வைத்து இருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
சோதனை நிறைவு
அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்த சோதனை மாலை 4.30 மணியளவில் நிறைவடைந்தது. இந்த சோதனையில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக கரூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story