மனைவி, மகனை கொன்றுவிட்டு தையல்காரர் தற்கொலை


மனைவி, மகனை கொன்றுவிட்டு தையல்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2021 2:41 AM IST (Updated: 16 Dec 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

திருவொற்றியூர்,

விழுப்புரம் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (வயது 45). இவருடைய மனைவி வனிதா (32). இவர்களுடைய ஒரே மகன் வெற்றிவேல் (10). இவர்கள் கடந்த 6 வருடமாக சென்னை புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் 3-வது மாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

சிவாஜி, அதே பகுதியில் பூண்டி தங்கம்மாள் தெருவில் தையல் கடை வைத்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே தற்போது ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். வனிதா, அருகிலுள்ள ஒரு குழாய் கடையில் வேலை செய்து வந்தார். வெற்றிவேல், அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

பிணமாக கிடந்தனர்

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். நேற்று காலையில் வெகுநேரமாகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் எதிர்வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே சிவாஜி, நைலான் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். வனிதா கழுத்தில் கயிறுடன் தரையிலும், அவருக்கு அருகில் அவர்களுடைய மகன் வெற்றிவேலும் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை

பின்னர் அவர்களது அறையை போலீசார் சோதனையிட்டனர். அதில் சிவாஜியின் மனைவி வனிதா எழுதிய தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர், தங்களுக்கு அதிக அளவு கடன் இருப்பதாகவும், கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதாகவும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் சிவாஜி, தனது மகன் வெற்றிவேலை முதலில் கொலை செய்து விட்டு அதன்பிறகு மனைவி வனிதாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு, அவர் இறந்தபிறகு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சிறுவன் உடலில் காயங்கள் இல்லை. விஷம் கொடுத்திருந்தால் வாயில் நுரை தள்ளி இருக்கும். ஆனால் அதுவும் இல்லை. எனவே தலையணையால் முகத்தை அழுத்தியதால் மூச்சுத்திணறி சிறுவன் இறந்து இருக்கலாம் என தெரிகிறது.

கந்து வட்டி பிரச்சினையா?

சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து. சிவாஜிக்கு கடன் கொடுத்தவர்கள் யார், யார்?, கடனை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனரா? கந்துவட்டி பிரச்சினை ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடன் தொல்லை காரணமாக மனைவி, மகனை கொலை செய்துவிட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story