கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை,
சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் பல்வேறு சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில் ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள நிலையில், கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், 5 லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் உள்ளதால் அதனை மேம்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக, 14 கோடியே 50 லட்சம் ரூபாயில் "கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்" அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. தற்போது ‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’ அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு திறந்து வைக்கிறார். இந்த சதுக்கம் பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. புல் தரையை சுற்றி அலங்கார விளக்குகள், தமிழ் எழுத்துக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள வாகன நிறுத்தத்தில், ஒரே நேரத்தில் 50 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள, 56 கடைகளில், 18 கடைகள் ஓட்டல்களுக்கும், கேண்டீன்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சதுக்கம் முழுவதும், 27 வகையான, 7,069 செடிகள் நடப்பட்டு, வளாகம் ரம்மியமாக உள்ளது.
Related Tags :
Next Story