பட்டப்பகலில் அரசு பள்ளி மைதானத்தில் மாணவி எரித்துக்கொலை? போலீஸ் விசாரணை


பட்டப்பகலில் அரசு பள்ளி மைதானத்தில் மாணவி எரித்துக்கொலை? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2021 11:28 AM IST (Updated: 16 Dec 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் மாணவி கிடந்தாள். அவள் எரித்துக்கொலை செய்யப்பட்டாளா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 10), பிரித்திகா (9) என்ற மகள்களும், நவீன்குமார் (6) என்ற மகனும் உள்ளனர். 3 பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் படிக்கின்றனர். இதில் பிரியதர்ஷினி 6-ம் வகுப்பும், நவீன்குமார் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பிரித்திகா 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் 3 பேரும் பள்ளிக்கு சென்றனர். காலை 11 மணி அளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவள் திரும்ப வராததால் சக மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவளை தேடினர்.

அப்போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் தீயில் கருகிய நிலையில் ஒரு சிறுமி கிடந்தாள். ஆனால் சிறுமியின் முகம் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் அது பிரித்திகாவா? என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த மாணவிகள் பிரியதர்ஷினியிடம் இதுகுறித்து கூறினர். அதைக்கேட்டு பதறிப்போன பிரியதர்ஷினி ஓடிச்சென்று பார்த்த போது தீயில் கருகி கிடப்பது தனது தங்கை தான் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைந்தாள்.

உடனே பள்ளி நிர்வாகத்தினருக்கும், தனது தந்தைக்கும் அவள் தகவல் கொடுத்தாள். இதைக்கேட்டு பதறி துடித்து பள்ளிக்கு ஓடிவந்த சத்யராஜ், தீயில் எரிந்து கிடந்த மகளை பார்த்து கதறி அழுதார். அப்போது அவளுடைய உடலில் அசைவு தெரியவே மகளை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தாண்டிக்குடி போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவி எரிந்து கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு காலி தண்ணீர் பாட்டிலும், அதன் அருகில் ஒரு தீப்பெட்டியும் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவற்றை கைப்பற்றிய போலீசார், மாணவியை யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்கள் எப்படி நுழைந்தனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளிடம் சம்பவம் நடந்த போது சந்தேகப்படும்படி யாரேனும் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story