அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - ஒ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, கனிகள் விலை உயர்வு என்ற வரிசையில் தற்போது மீன்களின் விலையும், மீண்டும் கட்டுமானப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த விலைவாசியையும், தற்போது விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் 2 மடங்கு, 3 மடங்கு உயர்ந்துள்ளது என்பது தெளிவாக தெரியவரும். இதன் மூலம் மக்கள் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்வது, இயற்கைச் சீற்றங்களில் இருந்து இன்றியமையப் பொருட்களை காப்பது, பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரை கண்டுபிடித்து தண்டிப்பது, கடத்தலைக் கட்டுப்படுத்துவது ஆகியவை விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆகும். இதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு. விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும், அதைத் தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நான் பல அறிக்கைகளை விடுத்துள்ளேன்.
இருந்தாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அப்படியே நடப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தாலும் அது வெறும் காகித அளவில்தான் இருக்கிறது. உண்மையாகவே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு எடுத்திருந்தால் விலைவாசி குறைந்து இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, ஏறிக்கொண்டே செல்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 7 மாத கால தி.மு.க. ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால், மக்களின் வாங்கும் சக்தி குறைவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.
இந்த நிலைமையில், இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு வாக்களிக்காத மக்களையும் கவரக்கூடிய வகையில் என்னுடைய பணி இருக்கும் என்று முதல்-அமைச்சர் அடிக்கடி கூறி வருகிறார். வாக்களித்த மக்களே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காமல் தி.மு.க.விற்கு வாக்களித்து விட்டோமே என்று ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், வாக்களிக்காத மக்களை கவரப்போவதாக முதல்- அமைச்சர் தெரிவித்து இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
விடியலை நோக்கி என்ற பிரசாரத்தின் மூலம் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் மக்களுக்கு விடிவுகாலம் கிடைக்கவில்லை. மாறாக, மக்கள் விரக்தியின் விளிம்பிற்குத்தான் சென்றிருக்கிறார்கள். ஒருவேளை விடியலை நோக்கி என்ற பிரசாரம் தி.மு.க.விற்கு விடிவு காலம் கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தற்போது வலுவாக எழுந்துள்ளது.
தாங்க முடியாத விலைவாசி உயர்வை கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், விரக்தியில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக முதல்-அமைச்சர் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story