மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... டி.என்.ஏ. பரிசோதனையில் அம்பலம்


மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... டி.என்.ஏ. பரிசோதனையில் அம்பலம்
x
தினத்தந்தி 17 Dec 2021 2:20 PM IST (Updated: 17 Dec 2021 2:20 PM IST)
t-max-icont-min-icon

17 வயது சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்த வழக்கில் அவருடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது டி.என்.ஏ. பரிசோதனையில் அம்பலமானது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்குமா? என்ற சந்தேகம் மருத்துவக் குழுவினருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்கு அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்திய போது, குழந்தை பெற்றெடுத்தது 17 வயது நிரம்பிய சிறுமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் பரிந்துரை செய்தனர். சிறுமியிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது உறவினரான 22 வயது வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகியதால் கர்ப்பிணியானதாக சிறுமி கூறினார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே கைதான வாலிபர், சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அதற்கு வேறு நபர் காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்.

போலீசார் நடத்திய புலன் விசாரணையில், சிறுமியின் 45 வயதான தந்தை கூலித்தொழிலாளி மீதும் சந்தேகம் எழுந்தது. அவரை பற்றி சிறுமியிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையின் தந்தை யார்? என்பதை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. கைதான வாலிபர், சிறுமியின் தந்தை மற்றும் பிறந்த ஆண் குழந்தை ஆகியோருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சிறுமியின் தந்தையின் டி.என்.ஏ.வும், குழந்தையின் டி.என்.ஏ.வும் ஒற்றுப்போனது. ஆனால் வாலிபரின் டி.என்.ஏ. மாறுபட்டு இருந்தது.

இதனால் சிறுமியை அவளுடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும், அதை வெளியே கூறாமல் மூடி மறைத்ததும் அம்பலமானது.

இதையடுத்து இந்த வழக்கில் சிறுமியின் தந்தையை தேனி அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story