நெல்லை பள்ளி விபத்து: பள்ளி நிர்வாகம் தான் முழுப்பொறுப்பு - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
பள்ளி நிர்வாகமும் சான்றளித்த அரசு அதிகாரிகளும் இந்த விபத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என நந்தகுமார் தெரிவித்தார்
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
இறந்த 3 குழந்தைகளுக்கு எங்கள் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.விபத்து நடந்த பள்ளி தனியார் பள்ளி அல்ல என்பதை ஒருமுறை நினைவு கூறுகிறேன். அது அரசு உதவி பெரும் பள்ளி என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
பள்ளி நிர்வாகம் மற்றும் கட்டிடத்தின் தன்மையை பார்வையிட்டு அதிகாரம் வழங்கிய அதிகாரிகள் தான் இந்த விபத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.அண்மையில் கூட கடலூரில் அரசாங்க பள்ளி ஒன்று முழுவதுமாக இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்த விபத்தில் எந்த குழந்தைக்கும் எதுவும் ஆகவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி கட்டிடத்தின் தன்மையை ஆராய்ந்து மாவட்ட பொறியாளர் சான்றிதழ் வழங்குகிறார்.அது மட்டுமின்றி அதன் பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதை உறுதி செய்து சான்று வழங்குகிறார் . அதேபோல் இந்த பள்ளிக்கும் சான்று வழங்கபட்டு இருக்கிறது. எனவே பள்ளி நிர்வாகமும் சான்றளித்த அரசு அதிகாரிகளும் இந்த விபத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இனி எந்த காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story