அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுன் ஆஜராக வேண்டும் சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு


அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுன் ஆஜராக வேண்டும் சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2021 12:13 AM IST (Updated: 18 Dec 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் 11-ந் தேதி அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுன் ஆஜராக வேண்டும் சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதன்பின்பு, இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்காக இருவரும் 17-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி டி.சந்திரசேகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.

அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், ‘மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது வாரம் ஒருமுறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் அந்த நிபந்தனையை முறையாக பின்பற்றவில்லை' என்றார்.

அதற்கு நீதிபதி, ‘மீராமிதுன் ஜாமீன் நிபந்தனையை பின்பற்றவில்லையென்றால் ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யலாமே' என்றார்.

இதன்பின்பு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மீராமிதுன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story