8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 19 Dec 2021 2:37 AM IST (Updated: 19 Dec 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த ‘நீட்’ தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 1-ந் தேதி வெளியானது.

அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ படிப்பு இடங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

8,883 மருத்துவ இடங்கள்

இது தொடர்பாக சுப்பிரமணியன் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6 ஆயிரத்து 958 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) ஆயிரத்து 925 இடங்கள் உள்ளன. அந்த வகையில் மொத்தம் 8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு வெளியாகிறது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

முதல்-அமைச்சரின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் உள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஆயிரத்து 450 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்போது திறக்கப்பட்டாக வேண்டும். அந்தவகையில் ஜனவரி 12-ந் தேதி பிரதமரும், தமிழக முதல்-அமைச்சரும் அந்த 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்துவைக்க இருக்கிறார்கள்.

நர்சுகள் நியமனம்

கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 4 ஆயிரத்து 848 நர்சுகள் மற்றும் 2 ஆயிரத்து 448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நலவாழ்வு மையங்களில் (ஹெல்த் அண்ட் வெல்நஸ் சென்டர்ஸ்) தற்காலிக அடிப்படையில் நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் நர்சுகளுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாகவும், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story