நேரடி செமஸ்டர் தேர்வு: எளிய முறையில் வினாக்கள் கேட்கப்படும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
நேரடி செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு எளிய முறையில் வினாக்கள் கேட்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது வகுப்புகள் நேரடியாக நடத்தப்படுவது போல, தேர்வுகளும் நேரடி முறையில் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்தது.அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவித்ததோடு, அதற்கான விரிவான அட்டவணையையும் வெளியிட்டது.இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் நேற்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜிடம், தேர்வு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
“நேரடி முறையில் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் அவகாசம் கேட்டு இருந்த நிலையில், உயர்கல்வித்துறை ஜனவரி மாதம் தேர்வு நடத்த கூறியிருந்தது. மாணவர்கள் நேரடி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்பட்ட பாடங்கள் அனைத்தும் தற்போது நேரடி வகுப்புகளில் நடத்தப்பட்டு தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
பாடத்திட்டங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. ஆனால் தேர்வில் எளிமையான முறையில் மாணவர்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். நோய்ப் பாதிப்பு அச்சம் இருக்கும் நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நேரடி தேர்வு சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story