ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு - 2 பேர் கைது
பாக்ஸ்கான் நிறுவனம் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதியில் தங்கவைத்துள்ளது. அங்கிருந்து அவர்கள் தொழிற்சாலையின் வாகனம் மூலம் வேலைக்கு சென்றுவருகின்றனர்.
இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தனர்.
இங்கு தங்கியிருந்த 130-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு கடந்த 15-ந்தேதி இரவு திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. எனினும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருசிலரை தவிர மீதமுள்ளவர்கள் அனைவரும் குணமடைந்து விடுதிக்கு திரும்பினர்.
இந்தநிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பெண்களை காணவில்லை என்று கூறி பாக்ஸ்கான் நிறுவனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 9½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்பத்தூர் அருகே தனியார் ஆலை தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கி உள்ளதாகவும், அஜாக்ரதையாக செயல்பட்டதாகவும் சமையல் மேற்பார்வையாளர்கள் பிபின், கவியரசன் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story