பள்ளி மாணவி தற்கொலை வேதனை அளிக்கிறது; அமைச்சர் அன்பில் மகேஷ் வருத்தம்


பள்ளி மாணவி தற்கொலை வேதனை அளிக்கிறது; அமைச்சர் அன்பில் மகேஷ் வருத்தம்
x
தினத்தந்தி 19 Dec 2021 8:03 PM IST (Updated: 19 Dec 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.



சென்னை,

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி குறிப்பிட்ட ஆசிரியையின் மகன் யார்? என விசாரித்து வருகின்றனர்.

இந்த் வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  மாணவியின் செல்போன், கடிதம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாங்காட்டில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பற்றி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையிலும், பள்ளி மாணவிகள் தற்கொலை சம்பவம் தொடர்வது வேதனை அளிக்கிறது.  மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கிறோம்.  அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மாணவிகள் பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் பேசுங்கள் என்றும், தயவு செய்து தற்கொலை முடிவு எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.


Next Story