ஆந்திராவில் மது விலை அதிரடி குறைப்பு - தமிழகத்துக்கு வந்து வாங்குவதை தடுக்க நடவடிக்கை


ஆந்திராவில் மது விலை அதிரடி குறைப்பு - தமிழகத்துக்கு வந்து வாங்குவதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2021 4:29 AM IST (Updated: 20 Dec 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு வந்து மது வாங்குவதை தடுக்க ஆந்திராவில் மது விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அதிரடி நடவடிக்கையை ஆந்திரா அரசு மேற்கொண்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலமாக மது விற்பனையை அரசு நடத்தி வருகிறது. அதுபோலவே ஆந்திரா மாநிலத்தில் ஆந்திரப் பிரதேஷ் ஸ்டேட் பீவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏ.பி.எஸ்.பி.சி.எல்.) நிறுவனம் மூலமாக மது விற்பனையை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் மதுவகைகளின் விலை 50 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இது அங்குள்ள மதுபிரியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திரா-தமிழக எல்லைகளில் இருக்கக்கூடிய ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. ஆந்திரா எல்லையில் உள்ள திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள கடைகளில் வருமானமும் அதிகரித்து வந்தது.

தமிழக எல்லைகளில்...

இதனைத்தவிர கள்ளச்சந்தைகளிலும் மது விற்பனையில் புரோக்கர்கள் ஈடுபட தொடங்கினர். அதாவது தமிழகத்தில் வாங்கும் மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்யப்பட்டது. இந்த சட்டவிரோத சம்பவமும் ஒருபக்கம் நடைபெற்று வந்தது.

மது வகைகளின் விலையேற்றம் காரணமாக ஆந்திரா மாநில அரசுக்கு மதுக்களின் மூலம் வரும் வருமானம் குறைய தொடங்கியது. அதேவேளையில் தமிழக எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வருமானம் அதிகரித்து வருவதும் ஆந்திரா அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. எனவே தமிழகம் சென்று மதுவாங்கும் போக்கை தடுக்கும் நடவடிக்கைகளில் ஆந்திரா மாநில அரசு ஈடுபட்டு உள்ளது.

அதிரடி குறைப்பு

அதாவது மதுவகைகளின் விற்பனை விலையில் (எம்.ஆர்.பி.) இருந்து 20 சதவீதத்தை அதிரடியாக ஆந்திரா மாநில அரசு குறைத்துள்ளது. இதனால் ஆந்திராவில் இனி மது விற்பனை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றம் மதுபிரியர்களையும் சற்று யோசிக்கவே வைத்திருக்கிறது.

ஆந்திரா மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை காரணமாக சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை போக்கு குறையும் என்றாலும் திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் எல்லையோரம் உள்ள மதுக்கடைகளில் விற்பனையை சற்று பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story