உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என அறிவிப்பு
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை வானிலை ஆய்வு மையம் என அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் வட திசைக்காற்றும், கிழக்கு திசைக்காற்றும் ஒரு சேர வரும்போது பெரும்பாலான மழையை பதிவு செய்யும். அந்தவகையில் தற்போது வட திசைக்காற்று அதிகளவில் இருந்தாலும், கிழக்கு திசையில் இருந்து வீசவேண்டிய காற்று என்பது கணிசமான அளவிலேயே இருக்கிறது. இதன் காரணமாகவே மழை குறைந்து, பனியின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது என்று ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் அந்தமானுக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் எந்த வித மழைக்கான முன்னறிவிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் தெரிவித்தார்.
மழை இல்லை என்றாலும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரையில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) வரை பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story