தமிழகத்தில் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 40½ லட்சம் பேர் பயன்
தமிழகத்தில் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 40½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
சென்னை,
“மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் முதல்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டது.
அடுத்ததாக 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த திட்டத்தில் இதுவரை 40 லட்சத்து 51 ஆயிரத்து 992 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 20 லட்சத்து 14 ஆயிரத்து 538 நபர்கள் தொடர் சேவைகளை பெற்றுள்ளனர் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story