அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2021 1:25 AM IST (Updated: 21 Dec 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலில் மூலவரான வன்மீகநாதர், கமலாம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கமலாலய குளத்தின் தென்கரை பகுதி தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளதை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கமலாலய குளத்தின் தென்கரை பகுதி சீரமைப்பு பணி மற்றும் ஆழித்தேரோட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்திற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி அன்று பெய்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையில், கமலாலய குளத்தின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதியில் 101 அடி சரிந்து விழுந்துள்ளது. மேலும் 47 அடி சுவர் சேதமடைந்துள்ளது.

இதனை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் 148 அடி தடுப்புச்சுவர் மீண்டும் அமைத்திட நிர்வாக ரீதியாக அறநிலையத்துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ஆழித்தேரோட்டம்

தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ பெருவிழாவின் நிறைவாக நடந்து வருகிறது. இந்த தேர்த்திருவிழாவானது கடந்த 25.3.2021 ஆயில்ய நட்சத்திரத்தில் நடந்தது. அடுத்த ஆண்டு(2022) மார்ச் மாதம் 15-ந் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்தப்பட உள்ளது.

எனவே ஆழித்தேரோட்ட விழாவிற்கு முன்பாகவே சேதமடைந்த தென்கரை சுற்றுச்சுவர் மற்றும் தெற்கு வடம்போக்கி வீதி சாலையினை சீரமைத்து ஆழித்தேரோட்டத்தினை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story