வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறையினர் தகவல் + "||" + 2 people who came to Erode from abroad were not affected by Omicron - Health officials informed
வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறையினர் தகவல்
வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு,
இந்தியாவில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 183 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். முதற்கட்டமாக 65 பேருக்கு ஒரு வாரம் முடிவடைந்ததால் 2-வது கட்டமாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் ஸ்பெயின் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வந்தவர்கள். இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் பொருட்டு இவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
இதன் முடிவுகள் நேற்று வந்தன. இதில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவில் உள்ள சாதாரண வகை கொரோனா தொற்று என்பதும், ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 158 பேர் தொடர்ந்து வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.