பஸ் மோதி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இடிந்து விழுந்தது பெண் பலி-20 பேர் காயம்


பஸ் மோதி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இடிந்து விழுந்தது பெண் பலி-20 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Dec 2021 4:28 AM IST (Updated: 21 Dec 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதியதில், சாலையோரம் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒரு பெண் பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்,

கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 33) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

வேடசந்தூர் அருகே அழகாபுரி-வேடசந்தூர் சாலையில் கூவக்காப்பட்டி ஆதிதிராவிடர் காலனி அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. சாலை வளைவில் திரும்பியபோது, வேடசந்தூரில் இருந்து அழகாபுரி நோக்கி மணல் ஏற்றி கொண்டு எதிரே வந்த டிப்பர் லாரி பஸ்சின் பின்பகுதியில் வேகமாக மோதியது.

இதனால் பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்து சாலையோரம் திருப்பினார். அப்போது அங்கு விவசாய கூலிவேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த கூவக்காப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த வீரம்மாள் (60), லட்சுமி (55) ஆகியோர் மீது பஸ் மோதியது. இதில், லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி

பெண்கள் மீது மோதிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது பயங்கரமாக பஸ் மோதியது.

இந்த விபத்தில் சுமார் 20 அடி உயரம் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இடிந்து விழுந்து தரைமட்டமானது. மேலும் அதில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இந்த காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

20 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ் டிரைவர் தினேஷ்குமார், வீரம்மாள் மற்றும் பயணிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேடசந்தூர், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Next Story