மழை நிவாரணம் ரூ 5 ஆயிரம் வழங்கும் பணி ரங்கசாமி தொடங்கி வைத்தார்


மழை நிவாரணம் ரூ 5 ஆயிரம் வழங்கும் பணி  ரங்கசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Dec 2021 9:28 PM IST (Updated: 21 Dec 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.500 குறைக்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி
மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.500 குறைக்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

கனமழை

புதுவையில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. வழக்கத்தைவிட அதிக அளவில் மழை பெய்ததால் நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தது. மழை வெள்ள சேத பகுதிகளை மத்திய குழுவும் பார்வையிட்டு சென்றுள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியும் கடிதம் எழுதியுள்ளார்.

நிவாரண நிதி

இந்தநிலையில் மழையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டதால் சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த மாதம் 16-ந்தேதி அறிவித்தார். மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணம் வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்ததால் அவர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று நவம்பர் 22-ந்தேதி அறிவித்தார்.
மழை நிவாரணம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும் வழங்கப்படாதது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மழை நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

வங்கிக்கணக்கில் செலுத்தம்

இத்தகைய சூழ்நிலையில் மழை நிவாரணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் இன்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு ஆணை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

ரூ.500 குறைப்பு

மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் ரூ.500 குறைக்கப்பட்டு தலா ரூ.4,500 வழங்கப்படுகிறது.
இதன் மூலம் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்கள் 1 லட்சத்து 85 ஆயிரம் பேரும், மஞ்சள் நிற அட்டைதாரர்கள் 1 லட்சத்து 42 ஆயிரம் பேரும் பயனடைவார்கள். இதன்மூலம் அரசுக்கு ரூ.156 கோடி செலவாகும்.
கடந்த காலங்களில் அரசு ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அரசு ஊழியர்களுக்கு மழை நிவாரணம் வழங்கப்படவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டம்

மழைநிவாரணம் வழங்குவதை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை நிவாரணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் இன்று முதல் செலுத்தப்படுகிறது. சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.4,500-ம் செலுத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு அமுதசுரபி மூலம் இலவச கைலி, சேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வாங்கப்பட்டுள்ளது. கடற்கரையிலும் வழக்கம்போல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Next Story