காரைக்காலில் வீடு புகுந்து துணிகரம் இருதய ஆண்டவர் சொரூபத்தில் இருந்த 10 பவுன் தங்க கிரீடம் கொள்ளை


காரைக்காலில் வீடு புகுந்து துணிகரம் இருதய ஆண்டவர் சொரூபத்தில்  இருந்த 10 பவுன் தங்க கிரீடம் கொள்ளை
x
தினத்தந்தி 21 Dec 2021 10:07 PM IST (Updated: 21 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் வீடு புகுந்து இருதய ஆண்டவர் சொரூபத்தில் இருந்த 10 பவுன் தங்க கிரீடத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்
காரைக்காலில் வீடு புகுந்து இருதய ஆண்டவர் சொரூபத்தில் இருந்த 10 பவுன் தங்க கிரீடத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உடல்நலம் பாதிப்பு

காரைக்கால் ஜவகர்லால் நேரு வீதியில் வசித்து வந்தவர் ரோஸ்மேரி (வயது 80). தனியாக வசித்து வந்த இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக உறவினரான அரியலூர் ஆண்டி மடத்தை சேர்ந்த அருள்பிரகாசம் காரைக்கால் வந்தார்.
ரோஸ்மேரியின் உடல்நலம் மோசமாக இருக்கவே அவரை அரியலூருக்கு அருள்பிரகாசம் அழைத்து சென்றார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரோஸ்மேரியின் வீடு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அருள்பிரகாசத்துக்கு தகவல் கொடுத்தனர். 

10 பவுன் கிரீடம் கொள்ளை

இதையடுத்து அவர் உடனடியாக காரைக்காலுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஹாலில் இருதய ஆண்டவரின் தலையில் இருந்த 10 பவுன் தங்க கிரீடம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் அருள் பிரகாசம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story